டாருல் அமான் தமிழ்ப்பள்ளியில் ‘கனா காணும் காலங்கள் 3.0’ கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சி… UUM தமிழ் சொற்படை மாணவர்கள் அசத்தல்!

கெடா:

வடமலேசியா பல்கலைக்கழகத்தின் (UUM) வடமலேசியத் தமிழ்ச் சொற்படை மாணவர்கள் ஏற்பாடு செய்த ‘கனா காணும் காலங்கள் 3.0’ எனும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி, 2026 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) டாருல் அமான் தமிழ்ப்பள்ளியில் (SJKT Darul Aman) வெற்றிகரமாக நடைபெற்றது.

  

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் 4, 5 மற்றும் 6 ஆம் ஆண்டு மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மாணவர்களிடையே மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதோடு, தன்னம்பிக்கை, தலைமைத்துவம், பகுத்தறியும் சிந்தனை மற்றும் பொதுப் பேச்சுத் திறனை வளர்ப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

நிகழ்ச்சியின் பிரதான அம்சமாக சொற்போர் தொடர்பான பயிற்சியும் போட்டியும் நடத்தப்பட்டது. சொற்போர் என்றால் என்ன, அதில் எவ்வாறு பங்கேற்பது, கருத்துகளை எவ்வாறு முன்வைப்பது, எதிர்வாதங்களை திறம்பட எதிர்கொள்வது மற்றும் மேடையில் தன்னம்பிக்கையுடன் பேசுவது போன்ற பல்வேறு அம்சங்கள் மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சொற்போர் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது பேச்சுத் திறன் மற்றும் சிந்தனை ஆற்றலை வெளிப்படுத்தினர்.

இதனுடன், மாணவர்களின் தமிழ்மொழிப் புலமை, குழு ஒருங்கிணைப்பு மற்றும் ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு ஊக்கமூட்டும் செயல்பாடுகள் மற்றும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சி மாணவர்களுக்குப் புதியலன தன்னம்பிக்கையையும் வழங்கியதுடன், எதிர்காலத்தில் சொற்போர் மற்றும் பொதுப் பேச்சுத் துறைகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தையும் உருவாக்கியது.

நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராக வடமலேசியா பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதி மன்றத்தின் தலைவர், முஹம்மது ஷாஹ்மி இமான் பின் முஹம்மது ரெசால் அவர்கள், வடமலேசியா பல்கலைக்கழக பொதுப் பேச்சுக் கழகத்தின் தலைவர், முஹம்மது ஷஹ்ருல் இர்பான் எம்.டி. ஷுக்ரி அவர்கள், பள்ளியின் தலைமையாசிரியர் திரு. மோகன் சிங்காரம் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் கலைசெல்வன் ஆறுமுகம் அவர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வடமலேசியத் தமிழ்ச் சொற்படை உறுப்பினர்கள் யாவரும் பேராதரவு தந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.

பள்ளி நிர்வாகத்தினர் பல்கலைக்கழக மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வையும் கல்விச் சேவையையும் பாராட்டி, இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகள் தொடர வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தனர்.

“கனா காணும் காலங்கள் 3.0” நிகழ்ச்சி, பள்ளி மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களின் எதிர்கால கல்வி மற்றும் தலைமைத்துவப் பயணத்திற்கு ஊக்கமளித்த ஒரு சிறந்த சமூகப் பங்களிப்பு நிகழ்வாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here