ஜாசினில் கத்திமுனையில் மிரட்டி டுரியான் பழங்கள், மோட்டார் சைக்கிள் கொள்ளை; போலீசாரிடம் சிக்கிய 4 பேர் கொண்ட கும்பல்!

கோலாலம்பூர்:

ஜாசினிலுள்ள பெம்பான், அஞ்சுங் காப்பாம் (Anjung Gapam) அருகே உள்ள ஒரு பழத்தோட்டத்தில், கத்திமுனையில் மிரட்டி டுரியான் பழங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் நான்கு நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொள்ளைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவருக்குச் சுமார் 9,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

27 முதல் 35 வயதிற்குட்பட்ட அந்த நான்கு சந்தேக நபர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணி முதல் காலை 7.30 மணி வரை ஜாசின், மலாக்கா தெங்கா மற்றும் மஸ்ஜித் தானா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட நான்கு தனித்தனி அதிரடி சோதனைகளில் கைது செய்யப்பட்டதாக ஜாசின் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்பரிண்டெண்டென்ட் லீ ராபர்ட் தெரிவித்துள்ளார்.

போலீசாரின் தீவிர விசாரணையின் போது, சந்தேக நபர்களில் இருவர் இச்சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். கொள்ளையர்கள் வந்த வாகனத்தைப் பாதிக்கப்பட்ட நபர் தனது கைபேசியில் படம் பிடிப்பதைக் கண்டதும், அவர்களில் ஒருவன் கத்தியைக் காட்டி அவரை மிரட்டியதாக ஒப்புக்கொண்டுள்ளான்.

“மற்றொரு சந்தேக நபர், கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் மீட்டரை (Meter) கழற்றிச் சென்றதை ஒப்புக் கொண்ட போதிலும், துரியன் பழங்களைத் திருடியதையோ அல்லது ஆயுதத்தைக் காட்டி மிரட்டியதையோ மறுத்துள்ளான்” என்று லீ ராபர்ட் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவத்தில் தனக்குத் தொடர்பில்லை என மறுத்த மற்றொரு சந்தேக நபரை, தனது தந்தையின் மோட்டார் சைக்கிளைத் திருடிய நபர் இவர்தான் என்று புகார்தாரர் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.

இக்கைது நடவடிக்கையின் போது மூன்று கைபேசிகள், ஒரு பெருடுவா மைவி (Perodua Myvi) கார், ஒரு யமஹா Y15ZR மோட்டார் சைக்கிள் மற்றும் இக்குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மடிக்கக்கூடிய கத்தி (Folding Knife) ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இக்கும்பல் மீது போலீசார் மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here