ஜோகூர் தேர்தல்: கிடைக்கப்பெற்ற 7 புகார்களில் 3 விவகாரங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை!

ஜோகூர் பாரு :

ஜோகூர் மாநிலத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நாள் முதல் இதுவரை தேர்தல் தொடர்பாகப் பெறப்பட்ட ஏழு புகார்களில், மூன்று புகார்கள் குறித்து போலீசார் அதிகாரப்பூர்வமாக விசாரணை அறிக்கைகளைத் திறந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து ஜோகூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்ஷாட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது விசாரிக்கப்பட்டு வரும் மூன்று விவகாரங்களும் தீ அல்லது வெடிபொருட்களைக் கொண்டு தீங்கிழைத்தல் (தண்டனைச் சட்டம் பிரிவு 435), பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் (தண்டனைச் சட்டம் பிரிவு 427) மற்றும் தேசத்துரோகக் கருத்துகளைப் பரப்புதல் மற்றும் நெட்வொர்க் வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் (1948 தேசத்துரோகச் சட்டம் பிரிவு 4(1) மற்றும் 1998 தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233) ஆகியவற்றின் கீழ் அடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஒட்டுமொத்தமாக ஜோகூர் தேர்தல் பிரச்சாரக் களத்தின் பாதுகாப்பு நிலைமை மிகவும் அமைதியாகவும், கட்டுப்பாட்டுள்ளும் இருப்பதாகவும், பொது அமைதியைக் குலைக்கும் வகையிலான அசம்பாவிதங்கள் எதுவும் இதுவரை நிகழவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

நேற்று நள்ளிரவு 11.59 மணி நிலவரப்படி, தேர்தல் பிரச்சாரங்களுக்காகப் போலீசாரிடம் சமர்ப்பிக்கப்பட்ட 420 அனுமதி விண்ணப்பங்களில் 414 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் நடைபெற்ற 191 அரசியல் நடவடிக்கைகளைப் போலீஸார் நேரடியாகக் கண்காணித்து, அவர்கள் தேர்தல் சட்ட விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை உறுதி செய்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் பரப்பப்படும் போலியான செய்திகள், ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் தூண்டல் கருத்துகளைக் கண்டறிந்து ஒடுக்க, சம்பந்தப்பட்ட பிற அரசு அமைப்புகளுடன் இணைந்து சமூக ஊடகத் தளங்களை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சட்டத்தை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டத்தோ அப் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.

இந்தத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஜொகூர் மாநிலம் முழுவதும் 544 அதிகாரிகள், 3,247 கீழ்நிலை காவலர்கள் மற்றும் 112 சிவில் ஊழியர்கள் என மொத்தம் 3,903 போலீஸ் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அடுத்த கட்ட பிரச்சாரத்தை நோக்கி நகரும் வேளையில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து சட்டத்தை மதித்து, வீண் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here