தனிப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்கிறார் ஃபுஸியா

பக்காத்தான் ஹரப்பானின் (PH) பெர்லிங் மற்றும் ஸ்கூடாய் வேட்பாளர்களால் வெளியிடப்பட்ட தனிப்பட்ட தேர்தல் அறிக்கைகளை, கூட்டணியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையுடன் பொதுமக்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம் என PKR பொதுச்செயலாளர் ஃபுஸியா சாலே வலியுறுத்தியுள்ளார். அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையானது, தனிப்பட்ட தொகுதி அளவிலான வாக்குறுதிகளைக் கொண்டிராமல், பக்காத்தான் ஹரப்பான் மாநில அரசை அமைத்தால் அதன் ஒட்டுமொத்த கொள்கைகளையும் திசையையும் கோடிட்டுக் காட்டும் என்று அவர் கூறினார்.

உதாரணமாக, குப்பை சேகரிப்புப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புவதாக வேட்பாளர்கள் கூறினால், அது தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியல்ல. அது, தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பும் தொகுதிகளின் மக்களுக்கு உதவுவதற்கான அவர்களின் தனிப்பட்ட அர்ப்பணிப்பாகும். இது மாநில அரசின் பரந்த கொள்கைகளின் ஒரு பகுதியல்ல என்று அவர் இன்று ஜோகூர் பாருவில் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று, பக்காத்தான் ஹரப்பானின் பெர்லிங் மற்றும் ஸ்கூடாய் தொகுதி வேட்பாளர்களான ஆலன் டீ மற்றும் கார்தியாயினி ஜெயபாலன், நாளை நடைபெறவுள்ள கூட்டணியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை வெளியீட்டிற்கு முன்னதாக, தங்களின் தனிப்பட்ட தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கான முன்மொழியப்பட்ட வாகன நிறுத்துமிட வளாகம், உள்ளூர் வணிகங்களுக்கு வலுவூட்டும் நடவடிக்கைகள் மற்றும் இளைஞர் திறமைகளை வளர்ப்பது உள்ளிட்ட தொகுதிகளின் உள்ளூர் பிரச்சினைகளில் தங்களது தேர்தல் அறிக்கைகள் கவனம் செலுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், ஜோகூர் பாரிசான் நேஷனல் இளைஞர் தலைவர் நூர் அஸ்லீன் அம்ப்ரோஸ், அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை வெளியீட்டிற்கு முன்பே வேட்பாளர்கள் தங்களின் தனிப்பட்ட தேர்தல் அறிக்கைகளை அறிவிக்கத் தேர்வுசெய்தால், பக்காத்தான் ஹரப்பான் மாநிலத்தை ஆளத் தயாராக இல்லை என்று கூறி, அவ்விருவரையும் விமர்சித்தார். டீ மற்றும் கார்த்தியாயினியின் நடவடிக்கைகள், பிஎச் தலைவர்கள் ஒருங்கிணைப்பதில் தோல்வியடைந்துவிட்டனர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

மேலும், பக்காத்தான் ஹரப்பான் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் செய்ததால், இரண்டு வேட்பாளர்களும் சுயமாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று நூர் அஸ்லீன் கூறினார். மாநில நிர்வாகத்தின் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறும் ஒரு அரசியல் கூட்டணியிடம் இது நடக்கக் கூடாத ஒன்று என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here