அன்பிற்கினிய பெர்லிங் மக்களே! வணக்கம்.
நான் ஆலன் தீ பூன் சியோங் N 46 பெர்லிங் தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர். பெர்லிங்கின் வளமான வசதிமிக்க நல்லிணக்கமிக்க எதிர்காலத்திற்காக ஐந்து முக்கிய வாக்குறுதிகளை முன்வைக்கின்றேன்.
1. சீர்மிகு சாலை, பாதுகாப்பான பயணம், நிம்மதியான வாழ்க்கை! (போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்துமிட சிக்கல்களுக்குத் தீர்வு)
பெர்லிங்கில் தினசரி வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலை விரிவாக்கமும் விவேக போக்குவரத்து சமிக்ஞை விளக்கு அமைப்புகளும் செயல்படுத்தப்படும். குறிப்பாக நூசா பெஸ்தாரி 2, தாமான் புக்கிட் இண்டா பகுதிகளில் உச்ச நேர நெரிசலைக் குறைக்க மாற்றுச் சாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பள்ளிகள், வணிகப் பகுதிகளைச் சுற்றியுள்ள சாலைப் பாதுகாப்பும் மேம்படுத்தப்படும். தாமான் பெர்லிங் சந்தை அருகிலுள்ள வாகன நிறுத்துமிடப் பிரச்சினையால் பொதுமக்களும் சிறு வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக:
* வணிக மையங்கள் சந்தைப் பகுதிகளில் இரண்டு மணி நேர வரையறுக்கப்பட்ட வாகன நிறுத்த முறை அறிமுகப்படுத்தப்படும்.
* புக்கிட் இண்டா கிரனாடா ஹாட்டல் அருகிலுள்ள நிலம் போன்ற இடங்களில் சிங்கப்பூரில் பணிபுரிபவர்களுக்கான பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களும் ஷட்டல் பேருந்து சேவையும் உருவாக்கப்படும்.
* ஜோகூர் பாருவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நூறு BAS.MY பேருந்துகளின் பயன்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி குடியிருப்புப் பகுதிகளுக்கும் முக்கிய இடங்களுக்கும் இடையிலான இணைப்பு மேம்படுத்தப்படும்.
2. வளமிக்க வணிகர், பொருளாதார செழிப்பு, மகிழ்ச்சியுடன் மக்கள் (குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு ஆதரவு)
உணவக உரிமையாளராக எனது அனுபவத்தின் அடிப்படையில், சிறு வியாபாரிகள் அரசாங்க உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், வணிகங்களை இலக்கவியல்மயப்படுத்தவும் வழிகாட்டுவேன். விற்பனையையும் பரிவர்த்தனைகளையும் திறம்பட நிர்வகிக்க POS விற்பனை முனைய முறைகளுக்கான ஆதரவும் வழங்கப்படும்.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேவைகளை மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, வெளிநாட்டு பொருள்கள், சேவைகளினால் பாதிக்கப்படும் பெர்லிங், ஜோகூர் உள்ளூர் நிறுவனங்களுக்கு நியாயமான வணிகச் சூழல் உருவாக்கப்படும்.
தம்போய் இண்டா சிறு விற்பனையாளர்கள், நடைபாதை வியாபாரிகளுக்காக வீடமைப்பு, ஊராட்சி அமைச்சின் MyKios திட்டத்தைப் பெற முயற்சி செய்வேன் . மேலும், பெர்லிங்கின் பாரம்பரிய உணவுகளையும் தனித்துவமிக்க வணிகங்களையும் முன்னிருத்தும் பெர்லிங் உணவுத் திருவிழாவும் ஏற்பாடு செய்யப்படும்.
3. திறமிக்க இளைஞர்கள், அளப்பரிய ஆற்றல், வளமான எதிர்காலம் (Z தலைமுறைக்கான கல்வி, தொழில், வேலைவாயய்ப்புகள்)
பிள்ளைகளுக்காக இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு (AI), கணினி நிரலாக்கம் (Coding) உள்ளிட்ட திறன் பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்படும். தொழில்முனைவில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டலுடன் தொழில் முன்னேற்ற ஆலோசனைத் தளங்களும் உருவாக்கப்படும்.
பெர்லிங் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் லியூ சின் தோங் முன்னெடுத்த தொழில் வாய்ப்பு கண்காட்சிகளைத் தொடர்ந்து நடத்துவேன். இதன் மூலம் இளைஞர்கள் தரமான வேலைவாய்ப்புகள், சிறந்த ஊதியம் வழங்கும் தொழில்கள்ஶீ கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பெற முடியும்.
4. அக்கறையுள்ள சமூகம், அமைதியான மக்கள், வளமான வாழ்வு (பெர்லிங் மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை)
பெர்லிங்கில் மூத்த குடிமக்கள் செயல்பாட்டு மையம் (PAWE) அமைப்பதை முன்னுரிமையாக்கி, மூத்த குடிமக்களுக்கான சுகாதாரப் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படும்.
வேலைக்குச் செல்லும் பெற்றோருக்காக குறைந்த கட்டணத்தில் தரமான மழலையர் கல்வியும் குழந்தைக் காப்பக வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். இது மலேசியப் பெண்கள் குழந்தைப் பராமரிப்பிற்காக வேலையை விட்டு விலகாமல் தொடர்ச்சியாகப் பணியாற்ற உதவும். புதிதாக குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் இளவயது தம்பதிகளுக்கான மலிவுவிலை வீடுகளின் தேவையையும் வலியுறுத்துவேன்.
5. பெர்லிங்கை பசுமையாக்குதல்
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலையான வாழ்விடம்)
பெர்லிங்கை பாதுகாப்பான, வளமிக்க, வாழ்வதற்கு வசதியான நகரமாக மாற்றுவதே எனது நோக்கம். அதன் அடிப்படையில் பொழுதுபோக்குப் பூங்காக்களைப் பாதுகாத்து மேம்படுத்துவேன். லியூ சின் தோங் அவர்களின் முயற்சியால் புக்கிட் இண்டா பொழுதுபோக்குப் பூங்கா, மேம்பாட்டாளரிடமிருந்து மீட்கப்பட்டு MBIP நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது பெருமைக்குரிய சாதனையாகும்.
அப்பகுதியில் 400 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 21 சூரிய ஒளி ஆற்றல் மின்விளக்குகள், கூடைப்பந்து அரங்கம்ஶீ கழிப்பறைகள்ஶீ நடைபாதைகள், பிரமிட் சிற்பத்தின் மேம்பாடுகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்டமாக MBIP துப்புரவுப் பணிகளையும் காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வலியுறுத்துவேன்.
பசுமைப் பகுதிகள், குடும்பப் பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டுப் பூங்கா பராமரிப்பும் மேம்படுத்தப்படும். சீரற்ற நீரழுத்தப் பிரச்சினைகளுக்கும் நீர் விநியோக நிறுவனத்துடன் இணைந்து தீர்வு காணப்படும்.
கம்போங் பாசிர், தாமான் தம்போய் இண்டா பகுதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைப் பாதித்தது. எனவே, பெர்லிங் வெள்ளப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு அவசியம். அதற்கென தெற்கு ஜோகூரில் உள்ள நம்பிக்கைக் கூட்டணி தலைமையுடன் இணைந்து:
* வடிகால்கள், நீர்வழிகள், ஆறுகளில் தொடர்ச்சியான துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* அதிக மழைப்பொழிவு, கடல் அலை உயர்வு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நவீன, ஒருங்கிணைந்த வடிகால் அமைப்பு மேம்படுத்தப்படும்.
* புதிய வீடமைப்பு, தொழில்துறை, குறிப்பாக தரவுமையத் திட்டங்கள், வெள்ளத் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என கடுமையாகக் கண்காணிக்கப்படும்.
* மழைநீர் தேக்கப் பகுதிகள், ஈரநிலங்கள், சதுப்புநிலங்கள் பாதுகாக்கப்பட்டு மரம் நடுதல் விரிவுபடுத்தப்படும்.
மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழுவில் இடம்பெறுவதை உறுதிசெய்வோம். மாநில சட்டமன்றத்தின் காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மைக்கான தேர்வுக்குழுவின் பங்கும் வலுப்படுத்தப்படும்.
நான் பெர்லிங் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் மாநில அரசை அமைத்தால், பெர்லிங்கில் கலாச்சார, படைப்பாற்றல் துறைகள் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் பாரம்பரியம் வலுப்பெறுவதுடன், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் தொழில் வாய்ப்புகளும் உருவாகும்.
ஆலன் தீ பூன் சியோங்
N.46 பெர்லிங் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர்




















