மனிதர்களிடம் அறியாமல் வரும் பாவங்களின் துயரத்தை போக்க ஈசனால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் பிரதோஷம்,
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6 மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இன்னும் சுருக்கமாக கூறவேண்டுமென்றால், பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு இரு தினங்களுக்கு முன் வரும் முக்கிய நிகழ்வு பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் தேவர்கள் அனைவரும், பூமியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்கு வந்து பூஜிப்பதாக ஐதீகம், அதனால்தான், இந்த நேரத்தில் மனிதர்களாகிய நாமும் சிவன் கோவிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்றால், தேவர்களுடன் இணைந்து பூஜை செய்த பலன் கிடைக்கும்.
இந்தவகையில் பிரதோஷத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு ஈசனின் அபிஷேக ஆராதனைகளைப் பார்த்துவந்தால், பிரம்மஹத்தி தோஷம் கூட விலகிச் செல்லும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.




















