கோலாலம்பூர்:
சுமார் 39.9 லிட்டர் எடையுடைய ‘ஃபெண்டானில்’ (Fentanyl) வகை அதிபயங்கர செயற்கை திரவ போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காக 65 வயது முதியவர் ஒருவர் இன்று பெர்லிஸிலுள்ள கங்கார் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசித்துக் காட்டப்பட்டதும், குற்றஞ்சாட்டப்பட்ட ஹிம் மாட் (Him Mat) என்ற அந்த முதியவர் அதனைப் புரிந்து கொண்டதாக மஜிஸ்திரேட் ஆனா ரொசானா முகமட் நூர் முன்னிலையில் தலையசைத்தார்.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி மாலை 5.50 மணியளவில் பாடாங் பெசாரில் உள்ள வீடு ஒன்றில், இன்னும் தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபருடன் இணைந்து இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதியவர் மீது ஆபத்தான போதைப்பொருள் சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39B(1)(a) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தணடனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த வழக்கில் சந்தேகநபரை பிரதிநிதித்துவப்படுத்தி வக்கீல் எவரும் முன்னிலையாகவில்லை. முதியவருக்குப் பிணை எதுவும் வழங்கப்படாத நிலையில், வழக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெர்லிஸ் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முஹம்மது அப்துல் ஹலிம், இந்தச் செயற்கை திரவ போதைப்பொருள் மின்-சிகரெட் (Vape) கார்ட்ரிட்ஜ்களில் அடைக்கப்பட்டு, தீவிர போதையை உருவாக்குவதற்காக அண்டை நாட்டிற்கு கடத்தப்படவிருந்த வேளையில், போலீசாரின் 3 அதிரடி சோதனைகள் மூலம் RM34.31 மில்லியன் மதிப்புள்ள இந்த போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.



















