அரசு சுகாதாரத் துறையில் நீடிக்கும் நெருக்கடி: 3 ஆண்டுகளில் 3,511 மருத்துவ அதிகாரிகள் அரசு சேவையை விட்டு விலகல்!

கோலாலம்பூர்:

மலேசியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 3,511 மருத்துவ அதிகாரிகள் அரசாங்க சுகாதார சேவையை விட்டு விலகியுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், கடந்த 2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தின் ஆண்டுவாரியான பதவி விலகல் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் 1,283 மருத்துவ அதிகாரிகளும், 2024-ஆம் ஆண்டு 1,153 அதிகாரிகளும் , 2025-ஆம் ஆண்டு 1,075 அதிகாரிகளும் என ஒட்டுமொத்த இழப்பு 3,511 மருத்துவ அதிகாரிகள் என அவர் சொன்னார்.

தற்போதுள்ள மருத்துவ அதிகாரிகளை அரசாங்க சேவையில் தொடர்ந்து தக்க வைப்பதற்காகப் பல கவர்ச்சிகரமான சலுகைகளை மேம்படுத்துதல், விரைவான தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நிபுணத்துவப் பயிற்சி (Specialist Training) பெறும் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைச் சுகாதார அமைச்சு எடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், அரசு மருத்துவர்கள் தங்களின் பணிப் பாதுகாப்பைக் கருதி அல்லது கூடுதல் வருமானம் வேண்டி தனியார் மருத்துவமனைகளில் இணைவதையோ அல்லது வெளிநாடுகளுக்கு மருத்துவர்களை ஆட்சேர்க்கும் பதிவு பெற்ற வேலைவாய்ப்பு முகமைகளின் (Foreign Talent Recruitment Agencies) முயற்சிகளையோ தடுத்து நிறுத்துவதற்குச் சுகாதார அமைச்சிடம் எவ்வித சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்றும் டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here