கோலாலம்பூர்:
கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் (Jalan Tun Razak) பகுதியில் நேற்று இரவு கார் மீது மரம் விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 43 வயது ஓட்டுநர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
விபத்தில் சிக்கிய முகமது அமீர் ஷாஸ்வான் சாயோன் (Mohd Amir Shazwan Saion) என்ற அந்த 43 வயது நபருக்கு இரு கைகளிலும் பலத்த காயம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் உட்புற ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. கோலாலம்பூர் மருத்துவமனையில் (HKL) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார் என்று, டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் சசாலீ ஆதாம் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த போது அந்தப் பிரம்மாண்ட மரம், 2 மாதக் குழந்தை முதல் 57 வயது முதியவர் வரை மொத்தம் 7 பேர் பயணித்த மற்றொரு காரின் மீதும் விழுந்ததில், குறித்த கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த காரில் இருந்த 7 பேருக்கும் வெளிப்புறக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை பரிசோதனைக்காக அவர்கள் அனைவரும் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நள்ளிரவு 10.20 மணியளவில் சிங்கப்பூர் தூதரகம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தினால் ஜாலான் துன் ரசாக்கில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) ஊழியர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் நள்ளிரவுக்கு மேல் மரத்தை வெட்டி அகற்றி, சேதமடைந்த வாகனங்களை மீட்ட பிறகு போக்குவரத்து வழக்கம் போல் சீரானது.
முன்னதாக, வாகனங்கள் சென்று கொண்டிருந்த போதே இந்த மரம் திடீரென சாலையில் சரிந்து விழும் திடுக்கிடும் டேஷ்கேம் காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



















