கிளந்தானில் மூன்று குழந்தைகள் உட்பட 19 ஆவணமற்ற வெளிநாட்டினர் குடிநுழைவு துறையால் கைது

கோத்தா பாரு:

கிளந்தான் மாநில குடிநுழைவுத் துறை மேற்கொண்ட Ops Kutip நடவடிக்கையில், மூன்று குழந்தைகள் உட்பட 19 ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை கைது செய்துள்ளது.

மார்ச் 10 அன்று முடிவடைந்த 10 நாள் நடவடிக்கை, மச்சாங் மற்றும் கோத்தா பாருவில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது என்று, கிளந்தான் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் முகமட் பைசல் ஷம்சுதின் கூறினார்.

“மார்ச் 1 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கை மார்ச் 10 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு முடிந்தது. “இந்த நடவடிக்கையின் போது, மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு வயது வந்த பெண்கள் உட்பட 19 வெளிநாட்டினரை நாங்கள் கைது செய்தோம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவர்கள் கம்போடியா, பாகிஸ்தான் மற்றும் சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

குடிநுழைவு சட்டத்தின் கீழ் அதிக காலம் தங்கியிருந்தது மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்தது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மேலதிக நடவடிக்கைக்காக தானா மேராவில் உள்ள தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பைசல் கூறினார்.

சட்டத்தை மீறும் எவருடனும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here