இந்திய சமூகத்தை அவமதிப்பதா? கோபிந்த் சிங் கண்டனம்

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் குறிப்பாக கெடா மந்திரிபெசார் சனுசி முகம்மட் நோர் இனப் பிரச்சினைகளை எழுப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜசெக தேசியத் தலைவரும் டிஜிட்டல் துறை அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.

அவர்கள் மலாய்க்காரர் அல்லாதவர்களின் குறிப்பாக இந்தியர்களின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். மலேசிய இந்தியர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுக்கு வேறு தாய்நாடு இல்லை.

ஆகவே மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்றுவிடலாம் எனும் பேச்சு ஏற்புடையதல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு ரத்தம் சிந்தி உழைத்திருக்கும் லட்சக்கணக்கான பிரஜைகளை இது நேரடியாக அவமதிக்கும் செயலாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

மலாய்க்காரர் அல்லாதவர்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்துவதற்கும் எந்த அரசியல் தலைவருக்கும் உரிமையில்லை. அவர்களை அவர்களின் சொந்தத் தாய் மண்ணில் குடியேறிகள் என அழைப்பதற்கும் உரிமையில்லை. ஆரம்பக்கால ரயில் பாதைகள், தோட்டங்கள், சாலைகள், ஆகியவற்றை அமைப்பதிலும் சிவில் சேவைத்துறையிலும் சட்ட சுகாதாரத் துறையிலும் இந்திய சமூகத்தினர் மகத்தான பங்கை ஆற்றியுள்ளனர்.

மலேசியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்கள் அவர்கள் என அவர் கூறினார். மலிவான அரசியலுக்காக அவர்களின் நாட்டுப்பற்று குறித்து கேள்வி எழுப்புவது பொறுப்பற்ற செயல் என்று அவர் சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here