பினாங்கு, பெனாகாவில் இருந்து சுயமாக வெளியேறிய 121 ரோஹிங்கியாக்கள்: கோலாலம்பூர் UNHCR அலுவலகத்திற்கு இடமாற்றம்!

கோலாலம்பூர்:

பினாங்கு, பெனாகாவில் உள்ள தற்காலிகக் குடியிருப்பில் வசித்து வந்த 121 ரோஹிங்கியா அகதிகள், நேற்று தங்களின் சுய விருப்பத்தின் பேரில் கோலாலம்பூரில் உள்ள ஐநா அகதிகள் உயர்ஸ்தானிகராலய (UNHCR) அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அப்பகுதியில் ரோஹிங்கியாக்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் மக்களிடையே எழுந்த பொருளாதாரப் போட்டி மற்றும் குடியிருப்புப் பிரச்சினைகள் காரணமாக இந்த இடமாற்றம் நடந்துள்ளது என்று, வடக்கு செபெராங் பிறை (SPU) மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் அன்வார் அப்துல் ரஹ்மான் கூறினார்.

“தேசிய ஒற்றுமைத் துறை, மாநில அரசாங்கம், தேசிய பாதுகாப்பு (MKN), உள்ளூர் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ரோஹிங்கியா சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரின் ஒத்துழைப்போடு, ரோஹிங்கியா மக்களால் சுயமாகவே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.”

பொது அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யக் காவல்துறை இந்த இடமாற்றக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டது. பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இச்சம்பவத்தைச் சமூக வலைதளங்களில் பரபரப்பாக்க வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளாகக் கம்போங் கோலா மூடாவில் உள்ள மீன்பிடி கிராமத்தில் சுமார் 500 ரோஹிங்கியாக்கள் வாடகை வீடுகளில் வசித்து வந்தனர். ஆரம்பத்தில் 12 வீடுகளாக இருந்த இக்குடியிருப்பு, சமீபத்தில் 33 வீடுகளாகப் பரவியது.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அப்பகுதியில் புதிதாக ஊடுருவிய 25 ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர்வாசிகள், வீட்டின் உரிமையாளர்கள், காவல்துறை மற்றும் UNHCR பிரதிநிதிகள் இடையே 3 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

அதன் அடிப்படையில், ஜூலை 26-ஆம் தேதிக்குள் அங்கிருந்து அமைதியான முறையில் வெளியேற அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த இடமாற்றம் நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here