துருக்கியில் கேபிள் கார் விபத்து; 23 மணி நேரம் அந்தரத்தில் தொங்கிய 174 பயணிகள்- ஒருவர் பலி, 9 பேர் காயம்

இஸ்தான்புல்:

துருக்கி நாட்டில் கேபிள் கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 23 மணி நேரம் போராடி 174 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

ரமலான் விடுமுறை தினமான நேற்று முன்தினம் துருக்கியின் மத்திய தரைக்கடல் பகுதியான அன்டாலியாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

இங்கு கொன்யால்டி கடற்கரை பகுதியில் இருந்து துனக்பெட்(618 மீட்டர்) சிகரத்தின் உச்சியில் உள்ள உணவகம் மற்றும் காட்சி தளங்களுக்கு கேபிள் கார் சேவை இயக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகளுடன் மலை உச்சிக்கு சென்ற கேபிள் கார் இயந்திர கோளாறு காரணமான நடுவே சிக்கி கொண்டு நின்றது. அப்போது அங்கிருந்த கம்பம் ஒன்றின் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தால் அந்தரத்தில் 174 சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களை 23 மணி நேரம் போராடி மீட்பு படையினர் நேற்று மீட்டனர்.

இதற்காக 607 மீட்பு படையினர், 10 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன என்று உள்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here