தீபாவளி போனஸ் தராத முதலாளியின் உயிரைப் பறித்த ஊழியர்கள்; மகாராஷ்டிராவில் சம்பவம்

தீபாவளி போனஸ் தர மறுத்த உணவக முதலாளியை ஊழியர்கள் கொலை செய்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் சனிக்கிழமை நிகழ்ந்தது.

ராஜு தெங்ரே என்ற அந்த உணவக முதலாளி, ஒரு மாதத்திற்கு முன்னர்தான் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆதி, சோட்டு என்ற இரு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தினார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மூவரும் ஒன்றாக உணவருந்தினர். அப்போது, ஆதியும் சோட்டும் தெங்ரேவிடம் பணமும் தீபாவளி போனசும் தருமாறு கேட்டனர். ஆனால், தர முடியாது என்று தெங்ரே மறுத்துவிட்டார்.

அதன்பின் தெங்ரே உறங்கச் சென்றுவிட்டார். இந்நிலையில், ஆதியும் சோட்டும் மறுநாள் அதிகாலையில் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கியும் தலையிலும் முகத்திலும் ஆயுதத்தால் தாக்கியும் கொலை செய்தனர்.

பின்னர் அவர்கள், தெங்ரேயின் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். அவர்கள் சென்ற கார், சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாக, அவ்விருவரும் காயமடைந்தனர். ஆயினும், இருவரும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டனர்.

பணப் பிரச்சினைதான் தெங்ரேவின் கொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டாலும், தெங்ரேக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் வேறு கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

முன்னாள் ஊர்த்தலைவரான தெங்ரே, அண்மையில் நடந்த ஊராட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here