(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சதர்ன் நியூ ஸ்டார்ஸ் கால்பந்து கழகம், சமீபத்தில் நடைபெற்ற ‘வேர்ல்ட் கப் சீரிஸ்’ (World Cup Series) கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடி, 4-ஆவது இடத்தைப் பெற்று குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது.
வான்ட்ரா பிரீமியர் ஏற்பாடு செய்த இந்தப் போட்டித் தொடர், நாட்டின் பல்வேறு கால்பந்து கழகங்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தி, மலேசிய அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் நடத்தப்பட்டது. அனைத்து கால்பந்து கழகங்களுக்கும் திறந்த இந்தப் போட்டியில், 12 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர், 18 வயதுக்குட்பட்டோர் என வயது அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தத் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றன. அவற்றில் பெரும்பாலானவை ஜோகூர் பாருவைச் சேர்ந்த அணிகளாகும். 45 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஜோகூர் மகளிர், டைகர்ஸ் ஷீல்ட், பி.பி. எப்.சி., சதர்ன் நியூ ஸ்டார்ஸ் ஆகிய அணிகள் களமிறங்கின.

போட்டியில் பங்கேற்ற எட்டு அணிகளில் ஒரே இந்திய மகளிர் அணியாக சதர்ன் நியூ ஸ்டார்ஸ் இடம்பிடித்தது என்பதை தனுஷா நாணசேகர் அணி தலைவர் தெரிவித்தார். அனுபவம் மிக்க அணிகளுடன் கடுமையாக மோதிய அந்த அணி, 4-ஆவது இடத்தைப் பெற்று தனது திறமையை நிரூபித்ததோடு, பலரது பாராட்டையும் பெற்றதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து “இந்தச் சாதனை பல நாட்கள் கடின உழைப்பு, தொடர்ச்சியான பயிற்சி, வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பலனாகும். இந்த வெற்றி, எதிர்காலப் போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் வீராங்கனைகளுக்கு அளித்துள்ளது,” என அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரமேஷ் ராமசாமி குறிப்பிட்டார்.
தொடர்ந்து, திறமையான இளம் வீரர், வீராங்கனைகளை உருவாக்கி, தொழில்முறை கால்பந்து உலகில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதே கழகத்தின் முக்கிய இலக்காக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறைவாக, அணியின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பயிற்சியாளர்களுக்கும், தங்களது பிள்ளைகளின் திறமையை நம்பி தொடர்ந்து ஊக்கமளித்து ஆதரவு வழங்கி வரும் பெற்றோருக்கும் சதர்ன் நியூ ஸ்டார்ஸ் கால்பந்து கழக நிர்வாகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. மேலும் கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள், அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரமேஷ் ராமசாமியை 0111-6972792 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அணியில் இணைவது குறித்த விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
























