கோலாலம்பூர்:
கடந்த ஜூன் 14-ஆம் தேதி பகாங்கில் நடைபெற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் PAS துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மானுக்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரித்துள்ளார்.
பிரதமரின் வழக்கறிஞர் சங்கர நாயர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இமெயில் வாயிலாக அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை கடிதத்திற்கு (Letter of Demand) பதிலளிக்க 48 மணி நேரக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அன்வார் இப்ராஹிம் மீது கட்டுப்பாடில்லாத் தன்மை, நெகிரி செம்பிலான் அரச வாரிசு விவகாரத்தில் தலையீடு, காவல்துறையைத் துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசியதாகக் கூறப்படும் இப்புகார் தொடர்பாக, நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு, அவதூறுப் பதிவுகளை நீக்குதல், நஷ்டஈடு கோரி வழக்கறிஞர் மூலம் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையான பதில் வராவிட்டால், நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.























