புக்கிட் காயு ஈத்தாம், நவம்பர் 10 :
தமது 13 வயதான சகோதரியை கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிறுவர் (18 வயதுக்கு குறைந்தவர்) உட்பட நான்கு சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி, தான் சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மூன்று நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் இச்சம்பவம் குறித்து முறையிட்ட பின்னரே, அவர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.
மூன்று ஆண்டுகளாக அவரது வீட்டில் உள்ள சகோதரர்களால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார்.
“சிறுமியின் அறிக்கையைத் தொடர்ந்து, போலீசார் 17 மற்றும் 36 வயதிற்கு உட்பட்ட சகோதரர்களை வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்தனர்.
பாதிக்கப்பட்டவர் மற்றும் சந்தேகநபர்கள் ஒரே தந்தையையும் வேறு வேறு தாயையும் கொண்டவர்கள் என்று அறியமுடிகிறது.
கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட்டை தொடர்பு கொண்டபோது , அவர் இதனை உறுதி செய்ததுடன் ,இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376B மற்றும் 2017 ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் பிரிவு 14(A) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.












