ஜோகூர் பாரு:
சிங்கப்பூரில் தாதியாகப் பணியாற்றி வரும் 29 வயது மலேசியப் பெண் ஒருவர், தனது காதலை முறித்துக் கொண்டதால் முன்னாள் காதலனால் கொலை மிரட்டல், தாக்குதல் மற்றும் ‘பாலியல் அடிமையாக்கும்’ அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருவதாகக் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
நினி (Nini) என அறியப்படும் அப்பெண், தங்களின் அந்தரங்கப் படங்கள் மற்றும் வீடியோக்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டி, முன்னாள் காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் தமக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
27 வயதுடைய அந்த ஆடவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், நிலையான வேலை இல்லாதவர் என்றும் தெரிந்ததையடுத்து, 5 மாதக் காதலை அப்பெண் முறித்துக் கொண்டுள்ளார்.
காதலை முறித்ததால் ஆத்திரமடைந்த அந்த ஆடவர், அப்பெண்ணைத் தாக்கியதுடன், தான் ஒரு ரவுடி கும்பலைச் சேர்ந்தவன் என்றும், நண்பர்களை வைத்து கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
மேலும், அந்த ஆடவரின் தாயாரும் இதில் தலையிட்டு, மீண்டும் சேர்ந்து வாழாவிட்டால் அந்தரங்க வீடியோக்களை பரப்புவதாக மிரட்டியுள்ளதுடன், சில வீடியோக்களை TikTok தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜூலை 9-ஆம் தேதி ஜோகூர் பாரு தெற்கு மாவட்டக் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். அப்போது காவல் நிலையம் வந்த காதலன் வீடியோக்களை அழித்ததால், பிரச்சினை முடிந்ததாகக் கருதி புகாரை அப்பெண் திரும்பப் பெற்றார்.
அதன் பின்னரும் அடங்காத அந்த ஆடவர், மீண்டும் காதலிக்க வேண்டும் அல்லது தனது பாலியல் தேவைகளுக்கு அடிமையாகப் பணிந்து வர வேண்டும், இல்லையேல் வீடியோக்கள் பரப்பப்படும் என மிரட்டியுள்ளார்.
அந்தரங்க வீடியோக்கள் தனது தாய் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 19-ஆம் தேதி மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமையும் தமக்கு இறுதி மிரட்டல் வந்ததாகக் கூறிய அப்பெண், தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்திச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘Team TLK’ புகார் மையத் தலைவர் லிம் தோ சியாங் கேட்டுக்கொண்டுள்ளார்.
























