13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் கடத்தல் முயற்சி: மர்ம நபரைத் தீவிரமாகத் தேடும் காவல் துறை!

கோலாலம்பூர்:

கோத்தா திங்கி, தாமான் ஸ்ரீ சௌஜானா பகுதியில் 13 வயது பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரைக் கடத்த முயன்ற மர்ம நபர் ஒருவரைக் காவல் துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, உயரமான, மெலிந்த மற்றும் கருப்பான தோற்றமுடைய ஒரு ஆடவரைத் தேடி வருவதாகக் கோத்தா திங்கி மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரண்டன் யூசோஃப் ஒத்மான் உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தன்று காலை 6:30 முதல் 6:40 மணிக்குள் அச்சிறுமி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

P-hailing (உணவு/பொருள் விநியோக) பெட்டி பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், சிறுமியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அந்த நபர் சிறுமியிடம் தனது பிறப்புறுப்பைக் காட்டி, தனது கைபேசியில் ஆபாசக் காணொளிகளைக் காண்பித்துள்ளார். மேலும், சிறுமிக்குப் பணம் தருவதாக ஆசைக்காட்டி, அவரது கையைப் பிடித்து இழுத்துக் கடத்தவும் முயன்றுள்ளார்.

அச்சமடைந்த சிறுமி, தான் வைத்திருந்த மின்சார ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிச் சென்று பள்ளி வளாகத்தை அடைந்துள்ளார். அங்குத் தனது ஆசிரியரிடம் அழுதுகொண்டே நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து 2017-ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 15(a)(1) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அல்லது சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் நூருல் சகியா தாவுத்தை (011-26046234) என்ற எண்ணில் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, பெற்றோர் தங்களது பிள்ளைகளை வெளியில் அனுப்பும்போது மிகவும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சமூக வலைத்தளத்தின் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here