கோலாலம்பூர்:
பானாசோனிக் (Panasonic AVC Networks) நிறுவனத்தின் மறுசீரமைப்பு காரணமாகப் பணிநீக்கம் செய்யப்படும் 541 ஊழியர்களுக்கு, உடனடி நிதி உதவி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்க மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணா வெளியிட்ட அறிக்கையில், “வேலை இழக்கும் தொழிலாளர்கள் எவ்வித ஆதாரமுமின்றித் தவிக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தீபகற்ப மலேசிய தொழிலாளர் துறை (JTKSM) மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Perkeso) இணைந்து ‘வேலை இழப்பிலிருந்து புதிய வேலைவாய்ப்பு’ (From job loss to new job) என்ற திட்டத்தின் கீழ் இவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கும்” எனக் குறிப்பிட்டார்.
Panasonic நிறுவனத்திலிருந்து மொத்தம் 541 பேர் (415 உள்ளூர் தொழிலாளர்கள், 126 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்) இரு கட்டங்களாகப் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் (முதல் கட்டம்: அக்டோபர் 31, 2026; இரண்டாம் கட்டம்: மார்ச் 31, 2027) என்று கூறப்படுகிறது.
மேலும் நிலுவை ஊதியம், விடுப்புக்கான இழப்பீடு மற்றும் பணிநீக்க நன்மைகள் உட்பட மொத்தம் RM64.38 மில்லியன் தொகையை ஊழியர்களுக்கு வழங்க Panasonic நிறுவனத்தின் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு காப்பீட்டு முறையின் (SIP) கீழ் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தற்காலிக நிதி உதவி வழங்குவதுடன், MYFutureJobs இணையதளம் வாயிலாக புதிய வேலைவாய்ப்புகளையும் நேர்காணல்களையும் ஒருங்கிணைக்க பெர்கேசோ நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், தொழிலாளர்களுக்குத் தேவையான புதிய திறன் பயிற்சிகளையும் (Upskilling & Reskilling) வழங்க மனிதவள அமைச்சு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.






















