புகைமூட்டம்: பினாங்கில் காற்றுத் தூய்மைக் கேடு 100-ஐத் தாண்டினால் வெளிப்புற நடவடிக்கைகள் ரத்து; 200-ஐத் தாண்டினால் பள்ளிகள் மூடல்!

கோலாலம்பூர்:

பினாங்கு மாநிலத்தில் புகைமூட்டத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு (API) ‘ஆரோக்கியமற்ற’ நிலையை எட்டினால் மாணவர்களின் வெளிப்புற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், குறியீடு 200-ஐத் தாண்டினால் பள்ளிகள் மூடப்படும் என்றும் பினாங்கு மாநிலக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் துறையின் (DOE) காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) தரவுகளின்படி, மிண்டின் கண்காணிப்பு நிலையத்தில் காற்றுத் தூய்மைக் கேடு ஆபத்தான அளவை எட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிண்டின் பகுதியில் உள்ள 4 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 3 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 7 பள்ளிகள் இச்சூழ்நிலையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

API 100-க்கு மேல்: பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; ஆனால் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்ற அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும்.

API 200-க்கு மேல்: சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் உடனடியாக மூடப்பட வேண்டும்.

API 500-க்கு மேல்: ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை.

இந்நிலையில் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியவும், போதுமான அளவு நீர் அருந்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உடல்நலக்குறைவு ஏற்படும் மாணவர்களை உடனடியாகப் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சூழ்நிலை மோசமடைந்தாலோ அல்லது API அளவுகள் மேலும் அதிகரித்தாலோ எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப் பினாங்கு கல்வித் துறை இயக்குனர் முகமட் ஜியாவுடின் மாட் சாட், இன்று பள்ளித் தலைமைகளுடன் அவசரக் கூட்டம் நடத்தவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here