நேப்பிடோ:
2017ஆம் ஆண்டு மியன்மாரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து சிறுபான்மை முஸ்லிம் சமூகமான ரோஹிங்யா மக்கள் வெளியேற்றப்பட்டதையடுத்து, அந்நாட்டு ராணுவம் அவர்கள் வாழ்ந்த கிராமங்களையும் பள்ளிவாசல்களையும் அழித்து, பாதுகாப்புக் கூடங்களாக பயன்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) ஆதரவுடன் செயல்படும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கை திங்கட்கிழமை (செப்டம்பர் 29) வெளியிடப்பட்டது.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரோஹிங்யா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ராணுவம் நடவடிக்கை எடுத்தது. அதையடுத்து வன்முறை தீவிரமடைந்து, கடற்கரை மாநிலமான ரக்கைனில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போது சுமார் 1.3 மில்லியன் ரோஹிங்யா அகதிகள் பங்களாதேஷில் நெரிசலான முகாம்களில் தங்கி வருகின்றனர். மியன்மார் ராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் இனப்படுகொலைக்கான முன்னுதாரணமாகக் கருதப்படுவதாக ஐநா பின்னர் வகைப்படுத்தியது.
மியன்மார் சுயேச்சை விசாரணை அமைப்பு (IIMM) வெளியிட்ட அறிக்கையில், “மியன்மார் அதிகாரிகள் திட்டமிட்டு ரோஹிங்யா கிராமங்கள், பள்ளிவாசல்கள், இடுகாடுகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றை அழித்தனர். ரோஹிங்யா மக்களின் நில உரிமைகள் குறித்த அதிகாரபூர்வ பதிவுகளை பயன்படுத்தி, அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை நேரடி சாட்சியங்கள், காணொளிகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக IIMM விளக்கியுள்ளது.
இத்தகவல் தொடர்பாக கருத்து தெரிவிக்க ராய்ட்டர்ஸ் தொடர்பு கொண்டபோதும், மியன்மார் ராணுவ பேச்சாளர் பதிலளிக்கவில்லை.
2017 ராணுவ நடவடிக்கையின்போது, இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தாலும், சில தனிநபர்களுக்கு எதிராக வன்முறை இடம்பெற்றதை மியன்மார் ராணுவம் முன்னதாக ஒப்புக்கொண்டிருந்தது.




















