குவாந்தான்:
பகாங், ரொம்பின் மாவட்டத்திற்குட்பட்ட முவாட்சாம் ஷா, தேசா மாவார் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 4:11 மணியளவில் இத்தீ விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததாகப் பகாங் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் முகமத் சலாஹுதீன் ஈசா தெரிவித்தார்.
இத்தீ விபத்தில் குடும்பத் தலைவர், அவரது மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அக்குடும்பத்தைச் சேர்ந்த மற்ற இரு பிள்ளைகள் அதிர்ஷ்டவசமாகத் தீக்காயங்களின்றி உயிர் தப்பினர்.
விபத்தில் அக்குடும்பத்தின் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும், அருகிலிருந்த அண்டை வீடும் சுமார் 70% சேதமடைந்தது. எனினும், அந்த வீட்டில் இருந்த 6 பேரும் பாதுகாப்பாக வெளியேறினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் மற்றும் இதனால் ஏற்பட்ட சொத்துச் சேதங்களின் மதிப்பு குறித்துத் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
























