கோலாலம்பூர்:
பினாங்கு, பத்து ஃபெரிங்கி கடற்கரைக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் குதிரையுடையவை என்றும், அவை மனித எலும்புகள் அல்ல என்றும் காவல்துறையினர் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, அந்தப் பகுதியைக் கடந்து சென்ற பொதுமக்கள் சிலர், வழக்கத்திற்கு மாறாக நீண்ட எலும்புகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவை மனிதனின் எலும்புகளாக இருக்கலாம் என்ற அச்சத்தில் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தவுடன், போலிஸ் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று, பினாங்கு வடகிழக்கு மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி ஆணையர் அப்துல் ரோசாக் முகமட் கூறினார்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த தடயவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் சந்திரோத் நவின் பங்கஜாக்ஷன், மீட்கப்பட்ட எலும்புகள் குதிரையின் எலும்புகளே தவிர, மனிதனுடையவை அல்ல என்பதைத் தீர்க்கமாக உறுதிப்படுத்தினார்.
இதன் மூலம், சமூக வலைத்தளங்களில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகப் பரவி வந்த வதந்திகளுக்கும், பொதுமக்கள் மத்தியில் நிலவி வந்த அச்சத்திற்கும் காவல்துறையினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.























