கூலிம் சிக்னலில் அரை மணி நேரமாக நின்ற லோரி: உள்ளே ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு!

கோலாலம்பூர்:

கூலிம், ‘ஹை-டெக் 12’ சாலைப் போக்குவரத்துச் சமிக்ஞை அருகே சுமார் அரை மணி நேரமாக நின்றிருந்த லோரி ஒன்றைச் சோதனையிட்டபோது, அதன் ஓட்டுநர் வாகனத்திற்குள்ளேயே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

நேற்று மாலை சுமார் 6.46 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. போக்குவரத்துச் சந்திப்பில் நீண்ட நேரமாக லோரி ஒன்று நிற்கவே, சந்தேகமடைந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் லோரியின் அருகே சென்று பார்த்துள்ளார்.

லோரி ஓட்டுநர் உள்ளே மயங்கிய நிலையில் இருப்பதைக்கண்ட அந்த இளைஞர், அவர் தூங்குவதாக நினைத்து எழுப்ப முயன்றுள்ளார். இருப்பினும் எந்தவொரு பதிலுமில்லை என்பதால் உடனடியாக அவசர உதவிக்கும் போலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குலிம் மருத்துவமனை உதவி மருத்துவ அதிகாரி, லாரியில் இருந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.

தகவல் கிடைத்தவுடன் கூலிம் ஹைடெக் போலீஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், பொதுமக்கள் கவனிப்பதற்கு முன்னரே அந்த ஓட்டுநர் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக லோரியினுள்ளேயே சுயநினைவின்றி இருந்தது தெரியவந்துள்ளதாக, கூலிம் மாவட்ட போலிஸ் தலைவர் கண்காணிப்பாளர் ஷாம்சுல் சின்ரிங் கூறினார்.

இச்சம்பவம் குறித்துத் தொடர் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here