கோலாலம்பூர்:
எல்லை தாண்டி வீசும் அடர்ந்த புகைமூட்டம் காரணமாகச் சரவாக் மாநிலத்தில் உள்ள 10 பகுதிகள் காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டில் (API) ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்துள்ளன. இன்று காலை 7.30 மணி நிலவரப்படி செரியான் பகுதியில் அதிகபட்சமாக 191 என்ற அளவு பதிவாகியுள்ளது.
மலேசியக் காற்றுத் தூய்மைக்கேடு மேலாண்மை அமைப்பின் (APIMS) இணையதளத் தகவலின்படி, சரவாக்கில் கூச்சிங் (181), சமரஹான் (178), ஸ்ரீ அமான் (174) மற்றும் சாரிக்கேய் (171) ஆகிய இடங்களும் பிற பகுதிகளான சிபு (160), சமலாஜு, பிந்துலு மற்றும் மூக்கா (156) மற்றும் மிரி (151) ஆகிய இடங்களும் ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தை பதிவுசெய்துள்ளன.
சரவாக்கிற்கு வெளியே மலாக்காவின் புக்கிட் ரம்பாய் (140) பகுதி மட்டுமே ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்துள்ளது.
காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, சரவாக்கில் 10 மாவட்டக் கல்வி அலுவலகங்களின் (PPD) கீழ் இயங்கும் 591 பள்ளிகளை மூட நேற்று உத்தரவிடப்பட்டது. குச்சிங், படாவான், பாவு, லுண்டு, சமரஹான், சிமுஞ்சான், செரியான், ஸ்ரீ அமான், லூபோக் அந்து மற்றும் பெத்தோங் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகள் இதில் அடங்கும்.
ஆசியான் சிறப்பு வானிலை மையத்தின் (ASMC) கூற்றுப்படி, இந்தோனேசியாவின் காலிமந்தான் பகுதியில் ஏற்பட்டுள்ள பரவலான காட்டுத் தீ காரணமாகப் புகைத் திரள்கள் வடக்கு நோக்கிச் நகர்ந்து மேற்குச் சரவாக்கிற்குள் நுழைகின்றன.
இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை (DOE) திறந்தவெளிகளில் தீ வைப்பதைக் தடுக்க ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், தேசியத் திறந்தவெளி தீத்தடுப்பு செயல்திட்டம் மற்றும் தேசியப் புகைமூட்டச் செயல்திட்டத்தையும் முடுக்கிவிட்டுள்ளது.























