சொந்தமாக கார் இல்லை.. ரூ.15 லட்சத்திற்கு கடனும் இருக்கு.. அமித் ஷா மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

அகமதாபாத்: காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் அமித்ஷா பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களைப் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். காந்தி நகர் தொகுதியை பொறுத்தவரை அங்கு மூன்றாம் கட்ட தேர்தலின் போது மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அங்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றே கடைசி நாளாகும். கடைசி நாளான நேற்று அமித் ஷா அங்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அமித்ஷா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து விவரங்கள் விரிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அமித் ஷா சொத்து மதிப்பு: அதில் அமித் ஷா தனக்கு ரூ.36 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் சொந்தமாக எந்தவொரு காரும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.. அவரது சொத்தில் ரூ.20 கோடி அசையும் சொத்துகள் என்றும் , ரூ.16 கோடி அசையா சொத்துகள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், அவரிடம் ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகளை உள்ளன. இதில் அவர் தனது மனைவியின் சொத்து மதிப்பையும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனைவி மனைவி சோனல் ஷாவிடம் ரூ.1.10 கோடி மதிப்பிலான நகைகளையும் இருப்பதாக அமித் ஷா கூறியிருக்கிறார். மேலும் மனைவி பெயரில் ரூ.22.46 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.9 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.31 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் இருக்கு: நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரில் கடனும் கூட இருக்கிறதாம். அவரது பெயரில் 15.77 லட்ச ரூபாய் கடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி சோனல் ஷா பெயரில் 26.32 லட்சம் கடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஆண்டு வருமானமாக 75.09 லட்ச ரூபாய் இருப்பதாக அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். மனைவிக்கு ஆண்டு வருமானமாக 39.54 லட்சம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா இந்த பிரமாண பத்திரத்தில் தனது வருமானங்கள் எங்கிருந்து வருகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். எம்பி சம்பளம், வீடு மற்றும் நில வாடகை, விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானம் வருமானம் மற்றும் பங்குகள், டிவிடெண்ட் மூலம் வருமானம் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் பிரமாணப் பத்திரத்தின் தொழில் என்ற பிரிவில் ஒரு விவசாயி மற்றும் சமூக சேவகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்குகள்: மேலும், அவர் தனது மீது மூன்று கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமித் ஷா குஜராத்தில் 1997 முதல் 2017 வரை எம்எல்ஏவாக இருந்துள்ளார். அதன் பிறகு ராஜ்யசபா மூலம் நாடாளுமன்றம் சென்றார். தொடர்ந்து கடந்த 2019இல் காந்தி நகர் லோக்சபா தேர்தலில் களமிறங்கிய அமித் ஷா அங்கும் வெற்றி பெற்றார்.

காந்தி நகர்: குஜராத்தின் மற்ற தொகுதிகளைப் போலவே காந்தி நகர் தொகுதியிலும் 1989 முதலே பாஜகவே வென்று வருகிறது. 1996இல் வாஜ்பாய் இங்கிருந்தே வென்றிருந்தார். அதேபோல அத்வானியும் 1998 முதல் 2014 வரை இங்கிருந்து போட்டியிட்டு வென்றார். 2014இல் இங்கு போட்டியிட்ட அமித் ஷா 8.94 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 5.57 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here