எஞ்சிய உணவை இயற்கை உரமாக மாற்றி சாதனை படைக்கும் குவந்தான்

குவந்தான்:

நோன்பு துறந்த பின்னர் மிச்சப்படும் உணவை பயிர்களுக்கான இயற்கை உரமாக மாற்றும் முயற்சியை குவந்தான் மாநிலம் கடைப்பிடித்துவருகிறது.

தற்போது நோன்புக்காலம் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில், ஒவ்வொரு நாளும் நோன்பு துறந்த பின்னர் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றின் வெளியே எஞ்சிய உணவை இயந்திரம் ஒன்றினுள் போடுகின்றனர். அந்த இயந்திரம் உணவை உரமாக மாற்றக்கூடியது.

உணவுக் கழிவைக் குறைக்கும் நோக்கில் மாநில அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நோன்பு காலத்தில் மிதமிஞ்சிய அளவில் உணவு மிச்சமாவதால் குறிப்பாக இந்த மாதத்தில் அதனை பயனுள்ளதாக மாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

உணவுக் கழிவை உரமாக மாற்றும் முன்னோடித் திட்டம் கடந்த ஆண்டு நடப்புக்கு வந்தது.

ஒவ்வொரு நாளும் 25 கிலோ உணவு உரமாக மாற்றப்படுவதாக பாகாங் மாநிலத்தின் திடக்கழிவு மற்றும் பொது சுகாதார நிர்வாகக் கழகத்தின் இயக்குநர் ஷாருடின் ஹமிட் தெரிவித்தார்.

ஆயினும், இது ஒரு சொற்ப அளவுதான். மலேசியாவில் ஒவ்வொரு நாளும் 13,000 டன்னுக்கும் மேற்பட்ட எஞ்சிய உணவு, குப்பைக் கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது. நோன்பு காலத்தில் இந்த அளவு இன்னும் அதிகமாக இருக்கும்.

உணவு விரயத்தைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வை அதிகரிக்க, உரமாக மாற்றும் திட்டம் உதவி வருவதாக ஷாருடின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here