மஞ்சுங்கில் வேலை தேடிய சீன நாட்டவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்த 3 வெளிநாட்டவர்கள் கைது!

ஈப்போ:

ஸ்ரீ மஞ்சுங் (Seri Manjung) அருகே உள்ள குடியிருப்பு ஒன்றில், சீன நாட்டவரைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்த குற்றத்திற்காக ஜப்பானியர் ஒருவர் மற்றும் இரு தைவான் நாட்டவர்கள் அடங்கிய 3 வெளிநாட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மஞ்சுங் மாவட்டக் காவல் தலைமையக செயல்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் 21 வயதுடைய பாதிக்கப்பட்ட இளைஞரிடமிருந்து ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) வழியாக உதவி கேட்டுப் புகார் வந்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று, மஞ்சுங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ஹாஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 12:15 மணியளவில் ‘வீனஸ் ரெசிடன்ஸ்’ பகுதிக்குச் சென்ற காவல் துறையினர், அடைத்து வைக்கப்பட்டிருந்த 21 வயது சீன இளைஞரை மீட்டதுடன், 21 முதல் 33 வயதுடைய 3 சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

பகுதி நேர வேலை தேடி வந்த அந்த இளைஞர், சந்தேக நபர்களுடன் தொடர்பில் ஏற்பட்டுள்ளார். பின்னர் சந்தேக நபர்கள் கூறிய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்ததால், அவர் வீட்டின் பூட்டி அடைக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபருக்கும் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களுக்கும் இடையே முன்பின் அறிமுகம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தகது.

இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டக் கோட்பாட்டின் பிரிவு 342 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்) மற்றும் 1953/63 குடிவரவுச் சட்டத்தின் பிரிவு 6(1)(c) (முறையான ஆவணங்களின்றி இருத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் வரும் ஆகஸ்ட் 29 வரை 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக மன்ஜோங் மாவட்டக் காவல் தலைமையகத்தையோ (05-6886222) அல்லது வாட்ஸ்அப் ஹாட்லைன் (017-6828005) எண்ணையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here