கோலாலம்பூர்:
தனது வீட்டின் முன்னே தொலைபேசி அழைப்பைப் பேசுவதற்காகச் சற்று நேரம் நின்ற 49 வயது பெண்ணை இலக்கு வைத்து, இரு மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த தங்க வளையலைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் காஜாங், தாமான் செராஸ் பெர்டானாவில் சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.
காலை 11.15 மணியளவில் அப்பெண் கைபேசியில் பேசிக்கொண்டிருந்ததை நோட்டமிட்ட இரு வழிப்பறிக் கொள்ளையர்கள் ‘யமஹா Y15ZR’ மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளனர். மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே இறங்கிய ஒருவன் முதலில் பெண்ணின் கைப்பையைப் பறிக்க முயன்றுள்ளான் என்று, காஜாங் மாவட்ட போலிஸ் தலைமை அதிகாரி உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்….
கையடக்கப் பையைப் பறிக்க முடியாததால், அப்பெண்ணின் இடது கையில் அணிந்திருந்த தங்க வளையலை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு தனது கூட்டாளியுடன் தப்பிச் சென்றுவிட்டான்.
இச்சம்பவத்தில் அப்பெண்ணுக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும், அவருக்கு சுமார் RM2,000 மதிப்பிலான பொருளிழப்பு ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.44 மணியளவில் இது குறித்துப் போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கொள்ளையர்களின் இந்த செயல் பதிவாகியுள்ளது. இருப்பினும், அவர்கள் கருப்பு நிற விஸர் (Dark Visor) கொண்ட தலைக்கவசம் அணிந்திருந்ததாலும், மோட்டார் சைக்கிள் பதிவு எண் தெளிவாகத் தெரியாததாலும் சந்தேக நபர்களைக் கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
குற்றவியல் சட்டம் பிரிவு 395-இன் (கூட்டு வழிப்பறி) கீழ் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் எய்டில் ஒத்மானை 019-371 3937 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள போலிஸ் நிலையத்திலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

















