கோலாலம்பூர்:
செபெராங் பிறையிலுள்ள தாமான் சாய் லெங் பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவன் காரை எதிர்த்திசையில் ஓட்டிச் சென்று, இரு வெவ்வேறு இடங்களில் 3 வாகனங்கள் மீது மோதித் தொடர் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 4.50 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகச் செபெராங் பிறை தெற்கு மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் நிக் அமீனுதீன் ராஜா அப்துல்லா தெரிவித்தார்.
லோரோங் குராவ் 23 பகுதியிலிருந்து ஜாலான் குராவ் 1 நோக்கிச் சிறுவன் ஓட்டி வந்த கார், முதலில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மீது பலமாக மோதியுள்ளது.
அதன் பிறகும் காரை நிறுத்தாமல் தப்பியோட முயன்ற அந்தச் சிறுவன், லெபோ குராவ் 5 பகுதியில் உள்ள ஒருவழிப் பாதையில் (One-way lane) தவறான திசையில் காரை எதிர்த்து ஓட்டிச் சென்றுள்ளான்.
“எதிர்த்திசையில் வேகமாகச் சென்ற சிறுவனின் கார், சரியான பாதையில் எதிரே வந்த மற்றொரு கார் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மூன்று வாகனங்களும் பலத்த சேதமடைந்த போதிலும், நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.” என்று, அசிஸ்டென்ட் கமிஷனர் நிக் அமீனுதீன் ராஜா அப்துல்லா தெரிவித்தார்.
சிறுவன் காரை எதிர்த்திசையில் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து, நேற்று இரவு 8.47 மணியளவில் காவல் துறைக்கு அதிகாரப்பூர்வப் புகார் கிடைத்தது.
இச்சம்பவம் தொடர்பாக 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-ன் கீழ் (அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
















