சுங்கை பட்டாணி அருகே ஆற்றில் கார் பாய்ந்து விபத்து: 77 வயது முதியவரைத் தேடும் பணி தீவிரம்!

சுங்கை பட்டாணி:

சுங்கை பட்டாணி அருகே இன்று அதிகாலை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், காரை ஓட்டிச் சென்ற 77 வயது முதியவர் மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில், லூபுக் செகிந்தா – லூபுக் காவா (Jalan Lubuk Segintah-Lubuk Kawah) சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான புரோட்டான் வீரா (Proton Wira) ரக காரை மாட் யூசோப் ஹாஷிம் (77) என்பவர் கோலா கெட்டில் பகுதியிலிருந்து ஃபெல்டா தெலோய் திமூர் (Felda Teloi Timur) நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.

காரில் இருந்த முதியவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதலில் அஞ்சப்பட்டது. இருப்பினும், கிரேன் உதவியுடன் கார் ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டபோது, அதன் உள்ளே முதியவர் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருடன் இணைந்து கோலா மூடா மாவட்ட காவல்துறையினர் ஆற்றுப் பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

முன்பகுதி மற்றும் பக்கவாட்டு கதவுகள் பலத்த சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்ட கார், மேலதிக விசாரணைக்காகக் கோலா மூடா போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here