இலங்கையிலும் நிம்மதியின்றி தவிக்கும் கோத்தபய ராஜபக்சே?.. கைது செய்ய கோரிக்கைகள் வலுப்பதால் அதிர்ச்சி

கொழும்பு: கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பியுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதாலும், அவரை கைது செய்ய வலியுறுத்தப்பட்டு வருவதாலும் கோத்தபய ராஜபக்சே மன சங்கடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நமது அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் விலைவாசி அதிகரித்ததோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர்.

இலங்கையை விட்டு வெளியேறினார்

இதற்கு காரணமாக இருந்த ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தினர். மக்களின் பயங்கர போராட்டத்தினால் இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த மாதம் 13-ம் தேதி இலங்கையை விட்டு வெளியேறினார். மாலத்தீவு சென்ற அவருக்கு அங்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் சிங்கப்பூருக்கு பறந்தார். அங்கிருந்தபடியே இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

இலங்கை திரும்புவதாக..

இதையடுத்து இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அவர் பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த மாதம் 11-ம் தேதி ராணுவ விமானம் மூலம் தாய்லாந்துக்கு புறப்பட்டார். அங்கிருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பேசி வருவதாகவும், விரைவில் இலங்கை திரும்புவதாகவும் கூறி வந்தார்.

இலங்கைக்கு வந்த கோத்தபய..

தொடர்ந்து பாங்காக்கில் இருந்து வந்த கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டார். இதற்காக அவர் அமெரிக்கா விசா பெற விண்ணப்பித்திருந்த நிலையில், திடீரென அவர் இலங்கைக்கு திரும்பியுள்ளார். இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு அமைச்சர்கள் பலர் நேரில் சென்று வரவேற்றனர். கிட்டத்தட்ட 51 நாட்கள் கழித்து இலங்கை திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

எதிர்ப்புகள் அதிகரிப்பு

எனினும் எப்போது வேண்டுமானாலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற அச்சத்தின் காரணமாக அவருக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் தங்கியிருக்கும் அரசு பங்களாவை சுற்றி பாதுகாவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க இலங்கை திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு போதிய ஆதரவு இல்லை.

இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் ஆதரவு இல்லாத நிலையில் இன்னொரு பக்கம் எதிர்ப்புகள் மேலும் வலுக்கத்தொடங்கியுள்ளன.

கைது செய்ய கோரிக்கை

கோத்தபய ராஜபக்சே அரசு கவிழ கரணமாக இருந்த போராட்டத்தை முன்னெடுத்த குழுவின் தலைவர்கள், தற்போது அவரை சட்டத்தின் முன் நிறுத்தி கைது செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், கோத்தபய ராஜபக்சேவிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இதனிடையே கொழும்புவில் உள்ள பங்களாவில் இருக்கும் கோத்தபய ராஜபக்சேவை அவரது அண்ணனும், இலங்கையின் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here