சுங்கை பீசி இராணுவ முகாமில் பரபரப்பு: துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ‘கெத்தும்’ நீருடன் இராணுவ வீரர் கைது!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர், சுங்கை பீசியில் உள்ள இராணுவ முகாமின் வாகன நிறுத்துமிடத்தில் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ‘கெத்தும்’ நீர் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக இராணுவ வீரர் ஒருவர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துச் செராஸ் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் லிம் சுன் ஹாவ் கூறுகையில், சந்தேக நபரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, பல ரவுண்டுகள் தோட்டாக்கள் மற்றும் கெத்தும் நீர் என சந்தேகிக்கப்படும் திரவம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

“சந்தேக நபருக்கு எதிராக 1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் (துப்பாக்கிச் சூட்டிற்கான கூடுதல் தண்டனை) கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 5 நாட்கள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த வீரருக்கு, வரும் அக்டோபர் 8-ஆம் தேதி வரை மேலும் 5 நாட்களுக்குத் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக” லிம் சுன் ஹாவ் கூறினார்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள மலேசிய ஆயுதப்படை (ATM), இ ராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளில் உள்ள அனைத்துத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் அனைத்தும் முறையாகச் சரிபார்க்கப்பட்டு முழுமையாகக் கணக்கில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதத்தின் பின்னணி குறித்தும், அது எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்தும் போலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here