சிரம்பான், ஜூன் 6:
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE) தெற்கு நோக்கிச் செல்லும் 243.3 ஆவது கிலோமீட்டரில், நேற்று ஐந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாக்கியதாக நம்பப்படும் கார் ஓட்டுநர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பெரோடுவா மைவி காரை ஓட்டி வந்த 28 வயதுடைய சந்தேக நபர், சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டதாகவும் சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நந்தா மரோஃப் தெரிவித்தார்.
“கைது செய்யப்பட்ட போது, அந்த நபர் போதைப்பொருளை அளவிற்கு அதிகமாக உட்க்கொண்டிருந்ததாக நம்பப்பட்டது மற்றும் சோதனை செய்ததில், அவரது வாகனத்தில் 3.39 கிராம் எடையுள்ள கஞ்சா என சந்தேகிக்கப்படும் உலர்ந்த செடிகள் கொண்ட வெளித்தெரியும் பிளாஸ்டிக் பாக்கெட்டையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
“வேலையற்ற அந்த சந்தேக நபர், இன்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு 1952-ம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 6 மற்றும் 15(1)(ஏ) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காலை 10.40 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சந்தேக நபரின் கார் கட்டுப்பாட்டை இழந்து 44 வயதுடைய நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற தோயோத்தா அவான்ஸா காரின் பின்புறத்தில் மோதியதாக நம்பப்படுகிறது.
இந்த மோதலைத் தொடர்ந்து, தோயோத்தா அவான்சா பல முறை திரும்பி மற்ற இரண்டு கார்களை மோதியதாகவும், அதே நேரத்தில் அதன் பின்புற டயர் எதிர் பாதையில் தூக்கி எறியப்பட்டு மற்றொரு பெரோடுவா மைவி மீதும் மோதியது என்று நந்தா கூறினார்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட அனைவரும் காயமின்றி தப்பியதாகவும், LN 166/69 விதி 10ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு நேற்று முதல் முகநூலில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.









