ஜோகூர் பாரு:
கடந்த திங்கட்கிழமை, பண்டார் பாரு பெர்மாஸ் ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தின் முன் நடந்த சண்டைக்கு கருத்து வேறுபாடு காரணமாக நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நகரைச் சுற்றியுள்ள நான்கு தனித்தனி இடங்களில், போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
“குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் 2.27 மணியளவில் புகார் கிடைத்ததாகவும், தகவலின் பேரில், 17 முதல் 43 வயதுடைய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
“சந்தேக நபர்களுக்கிடையே ஏற்பட்ட தவறான புரிந்துணர்வு சண்டைக்கு வழிவகுத்தது என்று ஆரம்பகட்ட விசாரணையின் முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கடந்த கால பதிவுகளை சரிபார்த்ததில், சந்தேக நபர்களில் ஒருவருக்கு மூன்று முந்தைய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது.
“சந்தேக நபர்கள் அனைவரும் ஒரு நாள் போலீஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர் என்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 148 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஓர் உணவகத்தின் முன் ஆண்கள் குழு ஒன்று குச்சிகளைப் பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டதைக் காட்டும் 39 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலானது.




















