வட மாநிலங்களில் புழுதிப் புயல்களைத் தூண்டும் கடுமையான வெப்ப அலை

வடமேற்கு மாநிலங்களில் ஏற்படும் வரலாறு காணாத அதிக வெப்பநிலை புழுதிப் புயல்களைத் தூண்டி, மழையின் தீவிரத்தைக் குறைக்கலாம். அடுத்த மூன்று நாட்களில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புழுதிப் புயல் வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 31 முதல் ஜூன் 3 வரை கிழக்கு ராஜஸ்தானிலும், மே 31 முதல் ஜூன் 1 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்திலும், ஜூன் 1, 2 ஆம் தேதி மேற்கு ராஜஸ்தானிலும் புழுதிப் புயல் வீசக்கூடும்.

வடக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் அதிகரித்துவரும் வெப்பநிலை, புழுதிப் புயல்கள் உருவாவதை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, வாணலி போன்று மாறியுள்ளது. சுரு மற்றும் பலோடி போன்ற இடங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. மற்ற இடங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதால், புழுதிப் புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது. தற்போதைய புழுதிப் புயல்கள் சூழ்நிலையின் காரணமாக தோன்றியுள்ளன. உள் வெப்பம், ஈரப்பதம் நிலைகள் மற்றும் ஈரப்பதம் இல்லாத நிலை, வெப்பச்சலனம் போன்ற வானிலை நிலைகள் புழுதிப் புயல்களைத் தூண்டும். பெரும்பாலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் புழுதிப் புயல்கள் ஏற்படுகின்றன. இந்த நிலைமைகள் ‘லூ’வைத் தூண்டுகின்றன” என்றார். ‘லூ’ என்பது வட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இந்தோ-கங்கை சமவெளிப் பகுதியில் மேற்கிலிருந்து வீசும் ஒரு வலுவான, தூசி நிறைந்த, புயல், வெப்பமான, வறண்ட கோடைக் காற்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here