10 ஆண்டுக்கு பின் தேர்தல்.. ஜம்மு காஷ்மீரில் எத்தனை சட்டசபை தொகுதி இருக்கு தெரியுமா? 4 முனை போட்டி

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்தது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக மாற்றியது, சட்டசபை தொகுதி மறுவரை உள்ளிட்டவற்றால் அங்கு சட்டசபை தேர்தல் என்பது நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட உள்ள சூழலில் அங்கு மொத்தம் எத்தனை தொகுதிகள் உள்ளன? பிரதான கட்சிகள் எவை? வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இன்று மாலை 3 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர்.இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்பது எதை பற்றியது? என்பது எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் கூட 4 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகலாம் என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரின் அரசியல் சூழல், அங்குள்ள நிலவரம் பற்றி இங்கு பார்ப்போம். ஜம்மு காஷ்மீருக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இங்கு நான்கு முனை போட்டி என்பது நடைபெற உள்ளது. அதாவது முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபிஎன அழைக்கப்படும் மக்கள் ஜனநாயக கட்சி, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின்(பரூக் அப்துல்லா மகன்) தேசிய மாநாட்டு கட்சிகள் பிரதானமாக உள்ளன. இந்த 2 கட்சிகளும் தான் மாற்றி மாற்றி ஆட்சியை பிடித்து வருகின்றன. அதேபோல் பாஜகவும், காங்கிரஸ் கட்சிகளும் ஜம்மு காஷ்மீரில் போட்டியிட்டு வருகின்றன.

இதற்கு முன்பு கடந்த 2014ல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது ஜம்மு காஷ்மீர் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தது. லடாக்கையும் உள்ளடக்கி இருந்தது. மொத்தம் 87 தொகுதிகள் இருந்தன. இதில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 44 தொகுதிகளில் வெல் வேண்டும். அந்த வகையில் கடந்த 2014 தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும், பாஜக 25 இடங்களையும், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களைக் கைப்பற்றின. இதையடுத்து பாஜகவும், மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. மெகபூபா முப்தி முதல்வராக இருந்தார். இந்த கூட்டணி ஆட்சி 4 ஆண்டுகள் நடந்தத. அதன்பிறகு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து ஆளுநர், ஜனாதிபதி ஆட்சி அமலானது.

அதன்பிறகு 2019ல் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அதோடு ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது 2 யூனியன் பிரதேசமானது. அதாவது ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால் ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுவரையறை பணிகள் தொடங்கின. ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து தொகுதி மறுவரை அறிக்கையை 2022 மே மாதம் 5ம் தேதி வழங்கியது. அதன்படி ஜம்மு டிவிசனில் முன்பு இருந்ததை விட கூடுதலாக 6 சட்டசபை தொகுதிகளும், காஷ்மீர் டிவிசனில் கூடுதலாக ஒரு தொகுதியும் உருவாக்கப்பட்டது. மொத்தம் 90 தொகுதிகள் ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்றுள்ளன. மேலும் 91 முதல் 114 தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தொகுதிகளை விட்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளை எடுத்து கொண்டால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும். மேலும் தொகுதி மறுவரை செய்யப்பட்டாலும் கூட தொடர்ந்து தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சமீபத்தில் 2 நாட்கள் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜம்மு காஷ்மீர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இத்தகைய சூழலில் தான் இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின்(பரூக் அப்துல்லா மகன்) தேசிய மாநாட்டு கட்சி, பாஜகவும், காங்கிரஸ் இடையே போட்டி நிலவ உள்ளது. இதன்மூலம் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here