கோலாலம்பூர்:
மலேசியாவிற்குள் துப்பாக்கிகள், போதைப்பொருள் மற்றும் பிற கடத்தல் பொருட்களைக் கடத்துவதைத் தடுக்க, தாய்லாந்துடனான நாட்டின் எல்லைப் பாதுகாப்பு இன்னமும் பலப்படுத்தப்படும்.
அதாவது சட்டவிரோத நுழைவு வழிகள் என இனங்காணப்பட்ட கிளந்தான், சுங்கை கோலோக் வழியாக மட்டுமல்லாமல், கெடா மற்றும் பெர்லிஸுக்கும் இந்த பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும் என்று தேசிய போலீஸ்படை தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை செத்தியா ஆலமில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலிலும், திங்களன்று ஜோகூரில் உள்ள சிம்பாங் ரெங்காமில் உள்ள ஒரு வீட்டிலும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.
சுங்கை கோலோக் வழியாக சட்டவிரோத கடவைகளுக்கு எதிரான கிளந்தான் காவல்துறையின் முயற்சிகள் வெற்றி பெற்றதாகவும், அது கெடா மற்றும் பெர்லிஸிலும் பின்பற்றப்படும் என்றும் காவல்துறைத் தலைவர் கூறினார்.





















