ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு அரசுப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் .

புத்ராஜெயா,

ஆசியான் உச்சநிலை மாநாடுகளின்போது, வாகனப் போக்குவரத்து நெரிசலில் அரசுப் பணியாளர்கள் சிக்கித் தவிப்பதை தவிர்க்கும் வகையில் அக்காலகட்டத்தில் அரசாங்கப் பணியாளர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்யும் தளர்வு அணுகுமுறை அமல்படுத்தப்படும். நடப்பில் உள்ள விதிமுறைகளின் கீழ் இச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் இலாகா ஒரு சுற்றறிக்கை வழி தெரிவித்திருக்கிறது.

தொழிலாளர் நலன் பேணுவதையும் வாழ்க்கை, வேலை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு சமச்சீரான நிலையை அமல்படுத்துவதற்கு மடானி அரசாங்கம் இம்முடிவை எடுத்திருக்கிறது என்று அந்த சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியான் உச்சநிலை மாநாடு காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் பணியாளர்களின் மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரம் இலாகா தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாண்டு மே மாதத்தில் ஆசியான் உச்சநிலை மாநாடு நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தலைவர்களை அழைத்து வருவதற்கு சாலைகளில் பல்வேறு இடங்களில் போலீசார் கடமையில் ஈடுபடுவதால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது. தொழிலாளர் நலன் கருதி அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடாது. என்ற நல்லெண்ணத்தில் அரசுப் பணியாளர்கள் சௌகரியமான சூழ்நிலையில் அவர்களின் பணியைத் தொடர்வதற்கு மடானி அரசாங்கம் வீட்டிலிருந்து. வேலை செய்யும் பரிவுத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கியிருக்கிறது.

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு தகுதி பெற்றிருக்கும் அரசாங்கப் பணியாளர்கள் அவரவர் இலாகா தலைவர்களை தொடர்புகொண்டு உரிய மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். மனிதவள சேவை, சுற்றறிக்கையில் வழங்கப்பட்டிருக்கும் ஒழுங்கு முறை நிபந்தனை வழிகாட்டி ஆகியவை முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here