கோலாலம்பூர்,
ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் இன்று மதியம் நடத்திய ஒரு மணி நேர அதிரடி நடவடிக்கையில், மலேசிய குடிநுழைவுத்துறை (JIM) 171 வெளிநாட்டவர்களை கைது செய்தது.
இந்த நடவடிக்கை மதியம் 12 மணிக்கு தொடங்கி, 160 அதிகாரிகள் 758 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் 254 பேர் உள்ளூர் குடிமக்கள் ஆவர். அதேபோல் 14 வணிக வளாகங்களும் பரிசோதிக்கப்பட்டன என குடிநுழைவு, சட்டம் அமலாக்கத் துறை இயக்குநர் பஸ்ரி ஒஸ்மான் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா, வங்கதேசம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும். இவர்களில் வயது 20 முதல் 50 வரையிலானவர்கள் அடங்குவர். அடையாள ஆவணங்கள் இல்லாமை, விசா விதிமீறல் மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியமை போன்ற குடிவரவு சட்ட மீறல்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
“பொருள்கள் வாங்க வந்தவர்கள் போல் நடித்து சிலர் அதிகாரிகளை ஏமாற்ற முயன்றனர். ஆனால் எங்கள் குழுவினர் காலை 10 மணி முதல் அப்பகுதியில் இருந்ததினால் அவர்களை சுலபமாக அடையாளம் காண முடிந்தது,” என்று அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தற்போது சிலாங்கூரின் பேரனாங் பகுதியில் உள்ள மிலேனியம் தற்காலிக குடிவரவு தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதே பகுதிகளில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
“குடிவரவு விதிகளை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், பணியாளர்களும், வேலையாட்களும் சட்டப்படி செயல்படுவது அவசியம் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் தொடரப்படும்,” என பஸ்ரி தெரிவித்தார்.



















