செகாமட்,
கடந்த ஜூலை மாதம் முதிய பெண் ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான தீவைத்த குற்றச்சாட்டில், தனியார் பல்கலைக்கழக சட்டப் பிரிவு மாணவர் ஒருவர் இன்று இங்கு அமர்வு நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகளுக்கும், ஒரு உயிரிழப்பு குற்றச்சாட்டுக்கும் முன்னிலைப்படுத்தப்பட்டபோது தாம் குற்றமற்றவர் என தற்காத்தார்.
21 வயதான செவ் ஹொங் ஜோ எனும் இளைஞர், ஜூலை 25-ஆம் தேதி காலை 4 மணியளவில் ஜாலான் பிரான்சிஸ் கூ, கம்பூங் புக்கிட் சிபுட் பகுதியில் உள்ள ஐந்து வீடுகளுக்கு பெட்ரோலைப் பயன்படுத்தி தீவைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் 436-ஆம் பிரிவின் கீழ் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
அதே நேரம், 72 வயதான டான் அ கேக் என்ற முதிய பெண்ணின் மரணத்திற்கு காரணமானதாகவும், தனது செயல் அவரின் உயிருக்கு ஆபத்தானது என்பதை அறிந்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குற்றவியல் சட்டத்தின் 304(b) பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கக்கூடிய குற்றமாகும்.
இதற்கு இணையாக, செகாமாட் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ஜூலை 25 அன்று காலை 4 மணி முதல் 6.45 மணி வரை, ஜாலான் ரியா, தாமான் ரியா பகுதியில் உள்ள ஒரு வீட்டு வேலியிலும், ஒரு வழிபாட்டுத் தலத்தின் வளாகத்திலும் மிரட்டும் அறிவிப்புகள் ஒட்டியதாகவும், இரு நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 507-ஆம் பிரிவின் கீழ் இரண்டு மிரட்டல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
























