ஈப்போ :
மனைவி அடிக்கடி திட்டியதால் கோபமடைந்த ஆடவர் ஒருவர், தனது மனைவியை கழுத்து நெரித்து கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று கெமோர், கம்போங் குவாங்கில் உள்ள வீட்டில், மதியம் சுமார் 12.40 மணியளவில் ஏற்பட்ட சம்பவம் தம்பதியினருக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் நிகழ்ந்தது என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்று, ஈப்போ மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் அபாங் ஜைனல் அபாங் அமாட் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்ததை அவரது தோழி கண்டு, உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.
“குறித்த சம்பவம், சந்தேக நபர் மற்றும் பாதிக்கப்பட்டவர் வசித்த வாடகை வீட்டிலேயே நடந்தது. மனைவி அடிக்கடி திட்டுவதால் ஏற்பட்ட அதிருப்தியே இந்தச் சம்பவத்திற்கான முக்கிய காரணம் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.
28 வயதான பெண்ணின் உடலைப் பரிசோதித்ததில், கழுத்து நெரித்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டன. அதனைத் தவிர, வேறு எவ்வித காயங்களும் காணப்படவில்லை.
37 வயதான கணவர் சம்பவத்துக்குப் பிறகு பிற்பகல் 3.40 மணிக்கு கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக்கான குற்றச்சாட்டில் தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
நாளை ராஜா பெர்மாசூரி பைனுன் மருத்துவமனை (HRPB) தடயவியல் பிரிவில் பிரேதப் பரிசோதனை நடைபெறும் என்றும், சந்தேக நபருக்கு ரிமாண்ட் பெற காவல்துறை நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





















