2026 ஆம் ஆண்டில் 47 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க மலேசியா தயார்-சுற்றுலாத்துறை அமைச்சர்

கோலாலம்பூர்:

மலேசியா இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 24.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 21 மில்லியனுடன் ஒப்பிடும்போது 16.8% அதிகரிப்பை காட்டுகிறது.

இதில் மலேசிய சுற்றுப்பயணிகளது மொத்த செலவினம் 174% உயர்ந்து RM161.9 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது என்று, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட 2024 கணக்கு அறிக்கையின்படி, மலேசியாவின் சுற்றுலாத் துறை தேசிய உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) 15.1% அல்லது RM291.9 பில்லியன் பங்களித்துள்ளது. இது 2023 இன் 14.9% (RM271.9 பில்லியன்) ஐ விட குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது.

2024 ஆம் ஆண்டில் மலேசியா 38 மில்லியன் வெளிநாட்டு பார்வையாளர்களை வரவேற்றுள்ளது — 2023 ஐ விட 31.1% அதிகம். அத்தோடு பார்வையாளர்களின் செலவினமும் 43.7% உயர்ந்து RM106.8 பில்லியன் என உயர்ந்துள்ளது என்று சொன்னார்.

அலோர் ஸ்டார் தொகுதியின் அஃப்னான் ஹமிமி தைப் அசமுதீன் (PN–Alor Setar) எழுப்பிய கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் தியோங், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நாட்டின் சுற்றுலாத் துறையின் சாதனைகள், வருவாய் வளர்ச்சி மற்றும் முக்கிய முனைப்புகள் குறித்து விளக்கமளித்தார்.

தியோங் கூறுகையில், சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில் அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதில்:

  • அனைத்துலக விமான சேவைகளின் பயண எண்ணிக்கையை உயர்த்துதல்
  • வணிக நிகழ்வுகள், கலாச்சார விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஊக்குவித்தல்
  • பயணிகள் அதிக நாட்கள் தங்குவதையும், அதிக செலவினத்தை மேற்கொள்ளுவதையும் ஊக்குவிக்கும் திட்டங்கள்

இந்த முயற்சிகள் ஏற்கனவே சிறந்த முடிவுகளை கொடுத்துவருவதாக அவர் கூறினார்.

2026 ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய இலக்கு

“Malaysia 2026” சுற்றுலா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அரசு 47 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை வரவேற்று, RM329 பில்லியன் சுற்றுலா வருவாயை இலக்காக கொண்டுள்ளதாக தியோங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here