கோலாலம்பூர்:
மலேசியாவின் மலாக்கோ மைனிங் (Malaco Mining) மற்றும் பிரான்சின் கேரஸ்டர் (Carester) நிறுவனங்களுக்கு இடையிலான அரிய வகை கனிமச் சுரங்கத் திட்டம் தற்போது ‘பைலட் பிளான்ட்’ (Pilot Plant) எனப்படும் சோதனை நிலையை எட்டியுள்ளது.
இந்தத் திட்டம் மலேசியாவின் தொழில்துறை திறனை விரிவுபடுத்துவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
மலேசியாவில் உள்ள அரிய வகை கனிம வளங்களைச் சுத்திகரிப்பதன் மூலம், அவற்றை காந்தங்கள் (Magnets) தயாரிக்கும் துறையில் பயன்படுத்த முடியும் என்று பிரான்சின் மூலோபாய கனிமங்களுக்கான பிரதிநிதி பெஞ்சமின் கல்லெசோட் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் வெற்றிபெற மலேசிய அதிகாரிகளுடன் பிரான்ஸ் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் அப்போதைய பிரான்ஸ் பிரதமர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் தற்போது வேகமெடுத்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தச் சுத்திகரிப்பு மற்றும் சுரங்கப் பணிகளில் பிரான்ஸ் ஈடுபட்டிருந்தாலும், இதன் அடுத்தகட்டமான காந்தத் தயாரிப்புத் துறையில் முதலீடு செய்ய ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் மலேசியாவில் ஒரு புதிய உற்பத்திச் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மலேசியாவின் முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக பிரான்ஸ் நீடிக்கிறது. அரிய வகை கனிமங்கள் மட்டுமின்றி, மற்ற பொருளாதாரத் துறைகளிலும் மலேசியாவுடன் இணைந்து செயல்படவும், விநியோகச் சங்கிலியை (Supply Chain) மேம்படுத்தவும் பிரான்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது



















