கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் நடைபெற்ற ‘செலாமாட் டத்தாங் மோடி ஜி’ (Selamat Datang Modi Ji) எனும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 12,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தமிழ் மொழியின் பெருமைகளை அவர் உலகளாவிய ரீதியில் பறைசாற்றினார்.
“இந்தியாவை உலகத்துடன் இணைக்கும் பாலமாகத் தமிழ் மொழி உள்ளது. தமிழ் இலக்கியம் முடிவில்லாதது; அதன் பண்பாடு உலகளாவியது”என்றும், “தமிழ் மொழி என்பது உலகுக்கான இந்தியாவின் விலைமதிப்பற்ற கொடை. தமிழர்கள் தங்களது கடின உழைப்பாலும் திறமையாலும் இன்று மனிதகுலத்திற்கே சேவை செய்து வருகின்றனர்” என்றும் புகழாரம் சூட்டினர்.
“மலேசியாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்திய மொழிகளில் குறிப்பாகத் தமிழ் கல்வி கற்பிக்கப்படுவது குறித்து நான் பெருமைப்படுகிறேன். இது குறித்து ஏற்கனவே எனது ‘மனதின் குரல்’ (Mann Ki Baat) நிகழ்ச்சியிலும் நான் குறிப்பிட்டிருந்தேன்” என்றார்.
பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டிப் பேசினார்: அதில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பெருமையுடன் குறிப்பிட்டார்.




















