‘காந்தாரா’ சர்ச்சை – தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ரன்வீர் சிங் மனுத்தாக்கல்

கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேச திரைப்பட விழாவில் ரிஷப் ஷெட்டி மற்றும் ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில், நடிகர் ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டியிடம் “காந்தாரா” படத்தில் வரும் காட்சியை ஜாலியாக நடித்துக் காண்பித்தார். தெய்வம் உடலுக்குள் வரும் காட்சியில் ரிஷப் ஷெட்டி வெளிப்படுத்திய நடிப்பு சிறப்பாக இருந்ததாக கூறிய ரன்வீர் சிங், அதுபோல் நடித்தும் காட்டினார்.

இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்ததாகவும், பெண் தெய்வத்தை அவமதித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், தவறாக புரிந்திருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்தார்.

இதனை கடலோர கர்நாடகாவின் புனிதமான ‘பூத கோலா’ கலாச்சாரத்தை அவமதிப்பதாக கூறி, பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் (பிரிவு 299) மற்றும் மத விரோதத்தைத் தூண்டுதல் (பிரிவு 196) உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு ரன்வீர் சிங் கர்நாடக ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here