2021-ஆம் ஆண்டு நடந்த எல்ஆர்டி (LRT) விபத்து தொடர்பாக, Rapid Rail நிறுவனத்திற்கு 100,000 ரிங்கிட் அபராதம்!

கோலாலம்பூர்:

கடந்த மே 24, 2021 அன்று, கேஎல்சிசி (KLCC) மற்றும் கம்போங் பாரு (Kampung Baru) நிலையங்களுக்கு இடையே LRT ரயில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 65 பயணிகள் காயமடைந்தனர். நிலப் பொதுப் போக்குவரத்து முகமை (APAD) நடத்திய விசாரணையில், ரேபிட் ரெயில் நிறுவனத்தின் பராமரிப்பு குறைபாடுகள் உறுதி செய்யப்பட்டன:

தண்டவாளத்தின் முக்கியமான பாகங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும், ரயிலை பாதுகாப்பாக இயக்குவதற்கான சூழலை அந்நிறுவனம் உறுதி செய்யவில்லை என்றும் கண்டறியப்பட்டது.

இது நிலப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 101(10)-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே பாதுகாப்பு விதிகளையும், தொழில்நுட்பப் பராமரிப்புத் தரங்களையும் அனைத்து ரயில் நிறுவனங்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பொது நலனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏபிஏடி (APAD) தெரிவித்துள்ளது.

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறுகையில், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் ரயிலை இயக்குபவருக்கும், கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது போன்றவை விபத்திற்கு முக்கியக் காரணங்களாக இருந்தன என்று குறிப்பிட்டிருந்தார்.

2023-ஆம் ஆண்டில், விபத்தால் பாதிக்கப்பட்ட எட்டுப் பேர் ரேபிட் ரெயில் மற்றும் பிரசாரனா (Prasarana) நிறுவனங்கள் மீது அலட்சியம் காட்டியதாக சிவில் வழக்குத் தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here