ஜோகூர் பாரு, ஏப்ரல் 11:
ஜோகூர் பாருவில் உள்ள மசாஜ் மற்றும் ரிஃப்ளெக்சாலஜி மையங்களில் குடிநுழைவுத் துறை (JIM) மேற்கொண்ட அதிரடி சோதனையில், ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 21 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை மதியம் 3 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது, முறையற்ற வகையில் பணிபுரிந்த வெளிநாட்டினர் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உள்ளூர் மேலாளர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின் போது, 18 முதல் 41 வயதுக்குட்பட்ட 21 வெளிநாட்டினர் பிடிபட்டனர். அவர்களில் மியான்மரைச் சேர்ந்த 12 பெண்கள் மற்றும் 7 ஆண்கள், மற்றும் சீனாவைச் சேர்ந்த 2 பெண்கள் அடங்குவர். அத்தோடு வெளிநாட்டினரைச் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்திய அந்த வளாகத்தின் உள்ளூர் மேலாளர் ஒருவரும் காவல்துறை மற்றும் குடிநுழைவுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகுந்த பணி அனுமதி ஆவணங்கள் இல்லாமை மற்றும் சமூக வருகை அனுமதிச் சீட்டுகளைத் (Social Visit Passes) தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் டத்தோ முகமட் ருஸ்டி முகமது டாரஸ் (Datuk Mohd Rusdi Mohd Darus), பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ரகசியத் தகவல்கள் மற்றும் விரிவான புலனாய்வுக்குப் பின்னரே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக ‘செத்தியா ட்ரோபிகா’ (Setia Tropika) குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சட்டவிரோதப் பணியாளர்கள் மற்றும் உரிய ஆவணங்களின்றி இயங்கும் மசாஜ் மையங்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.





















