கோலாலம்பூர்:
இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவில் உள்ள டுகோனோ எரிமலை நேற்று காலை திடீரென வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து, அங்கு சிக்கிக்கொண்ட ஒன்பது சிங்கப்பூரர்கள் உட்பட 20 மலையேற்ற வீரர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்று, காலை உள்ளூர் நேரப்படி 7.41 மணியளவில் நிகழ்ந்த இந்த எரிமலைச் சீற்றத்தின்போது, சுமார் 10 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பல் மண்டலம் வானில் பரவியதாக அந்நாட்டு எரிமலையியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட மலுக்கு மாகாணத்தில் உள்ள இந்தப் பகுதியில் மூன்றாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வேளையில், காவல் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் அடங்கிய குழுவினர் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளதாக உள்ளூர் மீட்பு முகமையின் தலைவர் இவான் ரம்டானி உறுதிப்படுத்தியுள்ளார்.
எரிமலைக் குழம்பும், சேறும் பாயும் அபாயம் இருப்பதால், எரிமலைப் பள்ளத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், விமானப் போக்குவரத்துச் சேவைகளில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















